Tuesday, November 13, 2018

அனைத்துலக குற்றவியல் அறமன்றத்தால் தண்டிக்கப்பட தமிழரான சட்டமேதைகள் திட்டமிடல் வேண்டும் :2008


அனைத்துலகக் குற்றவியல் அறமன்றம் முன் இனப்படுகொலை புரிந்தோர் தண்டனை பெறும் நாள் வருக!
- நந்திவர்மன், பொதுச்செயலாளர், திராவிடப்பேரவை

இனப்படுகொலை என்பதன் விளக்கங்களுள் பண்பாட்டுப் படுகொலையும் அடங்கும். தமிழர்கள் மட்டுமே பண்பாட்டுப் படுகொலை பற்றி ஒப்பாரி வைப்பார்கள் என எழுத்துக் கிறுக்கர்கள் ஏடுகள் தோறும் ஊடுருவி உளறி வைப்பது வழக்கம். கொரிய நாட்டை சப்பானிய நாடு அடிமைப்படுத்தி கொரிய மொழியையும் பண்பாட்டையம் அக்குமுகாயத்தில் இருந்து முற்றிலும் நீக்கிட நடந்த பண்பாட்டுப் படுகொலையை டோக்கியோ பல்கலைக்கழக ஆய்வு மாணவி திருவாட்டி மட்சுமரா தமது ஒப்பீட்டு ஆய்வில் பதிவு செய்துள்ளார்.

தமிழ்ப் பண்பாட்டுக் காவலரணாக தெளிதமிழ், தமிழ்க்காவல் உள்ளிட்ட ஏடுகள் விளங்குவது போல 1898 - 1910 க்குமிடையே கொரிய மொழியை பண்பாட்டைப் பாதுகாக்க அவாங்சன் சின்மன் என்ற ஏடு சப்பானிய எதிர்ப்பலைகளைக் கிளப்பிற்று. அதை எதிர்தகொள்ள புற்றீசல் போல கொரிய மொழி ஏடுகளை சப்பானியர்கள் பின்னிருந்து இயக்கினார்கள். தமிழருக்கெதிரான கருத்துப்பரப்பும் பணியில் தமிழரல்லாதார் ஈடுபட்டுள்ள இன்றைய நிலை, கொரிய மக்கள் விழித்தெழந்து பல்லாண்டாகியும் தமிழர் வழித்திட வில்லை என்பதை வெள்ளிடை மலையென விளக்குகிறது.

கொரிய கோவில்களில் மாற்றங்கள் செய்தனர். மொழி வரிவடிவத்தை ஊடுருவி மாற்றி அமைத்தனர். கொரியப் பேரரசர்கள் மீது பாடப்பட்ட பனுவல்களை சப்பானியப் பேரரசர்கள் மீது புனையப் பட்ட புகழ்மகுடங்களாக இடைச் செருகல் செய்தனர். யாழ் நூலக எரிப்பு போல, பொங்கள் விழாவில் நுழைக்கப்பட்ட போகி பெயரால் பழந்தமிழ் ஏட்டுச்சுவடிகள் எரிப்பு போல, ஆடிப் பெருக்கில் வீசியெறியப்பட்ட பனை ஓலைச் சுவடிகள் போல, வரலாற்றை மறைக்க கொரியப் பண்பாட்டை சீர்குலைக்க கொரிய வரலாற்று நூல்களை எரித்தார்கள். வரலாற்றை திருத்தி எழத நிருவனங்களை உருவாக்கினார்கள். சப்பானின் குடியேற்ற நாடாக கொரியா இருந்த போது நடந்த இந்தப் பண்பாட்டுப் படுகொலையில் இருந்து மீண்டு எழுந்து நிற்கிறது கொரிய மொழி! மீட்டுருவாக்கப்பட்டு விட்டது கொரியப் பண்பாடு! உய்சியாங், சோய் கியூன் பேயி ஆகிய அறிஞ்ர்கள் கொரிய வரலாற்று உண்மைகளை பதுங்கிடங்களில் இருந்து நூல்களாக்கி மக்கள் விழிப்புக்கு வித்திட்டனர்

 நம்மவர்கள் எவ்வாறு வடமொழிப் பெயர் சூடிப் பொருள் புரியாமலே இழிவுதரும் பெயர்களில் இறும்பூது கொண்டனரோ அவ்வாறே கொரியரும் சப்பானியப் பெயர் சூடி மயங்கிக் கிடந்தனர். 1911 ல் வெளியிடப்பட்ட பிரகடனம் கொரியப் பெயர் சூடி மகிழுமாறு கொரிய மக்களை வேண்டியது. அதே பணியை மறைமலையடிகள் முதல் திருமாவளவன் வரை ஈண்டு யார் செய்ய முனைந்தாலும் வரலாற்றில் வேறெங்கும் நிலவாத புதுப் பழக்கத்துக்கு தமிழர்கள் அடிமைகள் ஆவது சரியா என தமிழரல்லாதார் இன்றும் அலறுகிறார்கள், அலமருகிறார்கள்.

புதுவையில் அருகன் மேட்டு அகழ்வாய்வு முதல் இரும்பை மாகாளேசுவரர் ஆலயச்சின்னங்கள் வரை பன்நாடுகளுக்கு கடத்தப்பட்டது போல கொரிய நாட்டின் வரலாற்றுச் சின்னங்கள் சப்பானிய அருங்காட்சியகங்களிலும் தனியார் ஆவணக்காப்பகங்களிலும் சிறைப்பட்டன. தென் கொரிய அரசு கணக்கெடுப்பின் படி 75,311 நினைவுச் சின்னங்கள் கொரிய நாட்டிலிருந்து அப்பறப்படுத்தப்பட்டன, கடத்தப்பட்டன. சப்பான் நாட்டில் 34,369 நினைவுச்சின்னங்களும் அமெரிக்காவில் 17,803 நினைவுச் சின்னங்களும் உள்ளதாக தென் கொரிய அரசு கூறுகிறமது. அவற்றை மீட்டெடுக்க தென் கொரிய அரசு போராடி வருகிறது.

 கருநடத்திலும் கலிங்கத்திலும் கண்டெடுக்கப்படும் கல்வெட்டுகளை, ஓலைச்சுவடிகளை தமிழ்நாட்டு அரசு மீட்க முடியுமா? கேட்டாலும் கிடைக்குமா? அங்கிருப்பவர்கள் சிதைக்காமல் பாதுகாப்பார்களா? தமிழ் பேசும் தமிழரல்லாத உட்பகை கை வரிசை காட்டாமல் வாளா இருக்குமா? கேள்விகள் நம் உள்ளத்தைக் குடைந்தாலும் மொழியையும் பண்பாட்டையும் காக்க தமிழர்கள் முனைவது தவறில்லை என கொரிய வரலாறு அறிவு கொளுத்துகிறது.

தமிழ் ஈழத்தில் நிகழும் இனப்படுகொலைக்கு சிங்களப் பேரினவாதிகள் தண்டிக்கப்படுவார்களா? என்ற ஏக்கம் உலகத்தமிழர் உள்ளங்களில் உறங்கிக் கிடந்தது. அந்த ஏக்கம் போக்க கிழக்கு வெளுத்திடும் வேளை வந்து விட்டது என்று சில நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

இனப்படுகொலையை குறிக்கும் ஆங்கிலச் சொல்லான geocide கிரேக்கச் சொல்லான genos (இனம்) என்பதோடு படுகொலையை குறிக்கும் இலத்தீன் சொல்லான cide என்பதோடு இணைத்து 1944 ல் இராஃபெல் இலெம்கின் என்ற நீதியரசரால் உருவாக்கப்பட்டதாகும்.

உலக நாடுகள் ஒன்றியம் 1943 ல் இனப்படுகொலை என்பது ஒரு நாட்டினரை, மதத்தினரை, இனத்தவரை முற்றிலுமோ ஓரளவிற்கோ அழித்தோழிக்க மக்கட் திரளை கொல்வது, அவ்வினம் அழிந்தொழியக் கூடிய அகப்புறச் சூழல்களை உருவாக்குவது. மக்கட் பிறப்பு நிகழ்ந்து இனப்பெருக்கம் ஏற்படாமல் தடுப்பது, ஓரினத்தின் குழந்தைச் செல்வத்தை வேறினம் எடுத்துக் கொள்வது உள்ளிட்ட குற்றங்களைக் குறிக்கும் என விளக்கமளித்துள்ளது. அத்துணை விளக்கமும் தமிழ் ஈழத்தின் மீது சிங்களப் பேரினவாதிகள் நிகழ்த்தும் குற்றங்களுக்கும் பொருந்துகின்றன.

இத்தனை குற்றங்களையும் இழைத்த செயவர்த்தனா - சிரிமாவோ பண்டாரநாயகா - மகிந்த ராசபச்சே உள்ளிட்ட சிங்கள அரசின் அதிபர்களை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் முன்பு குற்றவாளிகளாக நிறுத்த முடியும். இது ஊமையின் கனவு அன்று. சூடான் அதிபர் இன்று குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளார். உலகம் போகும் திசையை இது சுட்டிக் காட்டுவதால் இன்று இனப்படுகொலை புரிபவர்கள் குற்றவாளிகளென தண்டிக்கப்படும் காலம் தொலைவில் இல்லை.

அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் மொரனோ ஓகாம்போ, சூடான் அதிபர் ஒமர் ஆசன் அல் பசீர் கைது செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வாதாடுகிறார். கடந்த 5 ஆண்டுகளில் 11 ஆணைகளை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. சூடான் அதிபரை கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஃபர், மசாலிட், சக்கவா இனக்குழுக்களை கொன்று குவித்தது. கொலை, நாடு கடத்தல், கற்பழிப்பு, சித்ரவதை, வலுக்கட்டாயமாக பிறந்தகத்திலிருந்து வெளியேற்றியது, அப்பாவிப் பொதுமக்கள் வசித்த டார்பர் பகுதி மீது போர் வெளித் தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட குற்றங்களுக்காக சூடான் அதிபர் குற்றவாளி என அனைத்ததுலக குற்றவியல் அறமன்றம் அறிவித்துள்ளது. இதே குற்றங்கள் புரிந்து வரும் மகிந்த ராசபக்சேவும் ஒரு நாள் குற்றவாளியாக தண்டிக்கப்படுவார் என்று எதிர் நோக்கலாம்.

அதே போல தனியரசு கோரிப் போராடி யூகோசுலாவிய ஒன்றியத்திலிருந்து பிரிந்த போசுனிய - எர்சகோவின் மக்கள் மீது இனப்படுகொலை தாக்குதல் நடத்திய செர்பிய மக்களாட்சிக் கட்சித் தலைவரும் முன்னாள் அதிபருமான இரடோவான் கராத்சிக் 13 ஆண்டுகள் தலைமறைவு வாழ்விற்குப் பிறகு கைது செய்யப்பட்டார். குற்றம் புரிந்த கொற்றவர்கள் எங்கிருப்பினும் எந்நாளும் அறத்தின் தண்டனையை ஏற்றே ஆகல் வேண்டும் என்ற வடியல் உலகிற்கு ஏற்பட்டுள்ளது.

சிறையில் கண்ணைத் தோண்டியவர்கள், தமிழ்ப் பெண்களின் மார்பகங்கள் மீது சிங்கள ஸ்ரீ எழுத்தை சூட்டுக் கோலால் தீட்டியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் வயிற்றைக் கிழித்து சிசுக்களை காலில் இட்டு நசுக்கிய நச்சரவங்கள், தமிழ் மண்ணில் போர் வெறியால் பிணமலைகளைக் குவித்தவர்கள், அறமன்றில் நிறுத்தப்பட்டாகல் வேண்டும். மகிந்த இராசபக்சே அனைத்துலக குற்றவியல் அறமன்றத்தால் தண்டிக்கப்பட தமிழரான சட்டமேதைகள் திட்டமிடல் வேண்டும்.

நந்திவர்மன், பொதுச்செயலர், திராவிடப்பேரவை, புதுச்சேரி, இந்தியா
Wednesday October 8, 2008 - 06:23am (IST) Permanent Link | 0 Comments

No comments:

AIADMK spent Rs 641 crore in 2016 to bribe its way back to power Documents reveal that AIADMK spent Rs 641 cr in 2016 to bribe its ...